செய்திகள்
உணவகம்

மகாராஷ்டிராவில் நாளை முதல் உணவகங்கள், பார்கள் திறப்பு

Published On 2020-10-04 03:17 GMT   |   Update On 2020-10-04 03:17 GMT
மகாராஷ்டிராவில் நாளை முதல் உணவகங்கள், பார்கள் திறக்கப்பட உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிராவில் மாநில அரசு அனுமதி அளித்ததை அடுத்து நாளை (திங்கட்கிழமை) முதல் உணவகங்கள், பார்கள், வணிக வளாக புட்கோர்ட்கள் திறக்கப்பட உள்ளன. இந்தநிலையில் உணவகங்கள், பார்கள் மற்றும் புட் கோர்ட் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு அறிவித்து உள்ளது. இதன்படி உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வாடிக்கயைாளர்கள் உணவகத்திற்கு உள் செல்வதற்கு முன் அவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

சோதனையின் போது காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் ஓட்டலுக்குள் அனுமதிக்கப்பட கூடாது. அறிகுறியற்றவர்கள் மட்டுமே உணவகத்திற்குள் உட்கார்ந்து சாப்பிட முடியும்.

சாப்பிடும் நேரம் தவிர மற்ற சமயங்களில் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். உணவக நாற்காலிகள், கை கழுவும் இடம் போன்ற பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்யவும், முடிந்த வரை டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல உணவகத்திற்குள் வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி பாதைகள் இருக்க வேண்டும் எனவும், உணவகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு சமைத்த உணவு பொருட்களை மட்டுமே பரிமாற வேண்டும் எனவும் சமைக்காத, குளிர்ந்த சாலட் போன்ற உணவு பொருட்களை வழங்க கூடாது எனவும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. மும்பையை பொறுத்தவரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை மட்டுமே சாப்பிட்ட அனுமதிக்க வேண்டும் என உணவகங்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News