கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு இன்று முதல் 31-ந் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், இந்தியாவில் கேரளாவில்தான் முதல்முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மாநில அரசின் துரித நடவடிக்கையால், அதன் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதனால், 7 மாதங்கள் கழித்து, கடந்த 11-ந் தேதிதான், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டது.
ஆனால், அதன்பிறகு வேகமாக அதிகரித்தது. கடந்த 24-ந் தேதி ஒன்றரை லட்சம் எண்ணிக்கையையும், நேற்று முன்தினம் 2 லட்சத்தையும் தொட்டது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டனர். 29 பேர் பலியானார்கள். பலி எண்ணிக்கை 771 ஆக உயர்ந்தது. தற்போது, 72 ஆயிரத்து 339 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கேரளாவில், 144-வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, தலைமை செயலாளர் விஷ்வாஸ் மேத்தா இந்த ஆணையை வெளியிட்டார்.
ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
144 தடை உத்தரவு, 3-ந் தேதி (இன்று) காலை 9 மணிக்கு அமலுக்கு வருகிறது. 31-ந் தேதிவரை இது அமலில் இருக்கும். இதன்படி, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், மாவட்ட கலெக்டர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்து, தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும், நோய் பரவல் ஆபத்து உள்ள பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும். திருமணங்கள், இறுதி ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு ஏற்கனவே உள்ள தளர்வுகள் நீடிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.