செய்திகள்
பிரசாந்த் பூஷண்

ஒரு ரூபாய் அபராதம்... தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார் பிரசாந்த் பூஷண்

Published On 2020-10-01 06:34 GMT   |   Update On 2020-10-01 06:34 GMT
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த குற்றத்திற்காக அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை மற்றும் 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்பட தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனையடுத்து ஒரு ரூபாய் அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார் பிரசாந்த் பூஷண். அதேசமயம் தீர்ப்பை ஏற்க மறுத்தார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு விவரம்:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடுமையாக விமர்சித்திருந்தார். முந்தைய தலைமை நீதிபதிகளின் செயல்பாடு குறித்தும் டுவிட்டரில் விமர்சித்திருந்தார். நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவித்த உச்ச நீதிமன்றம், பூஷண் தனது பதிவுகளுக்கு வருத்தம் தெரிவிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தனது முழு நம்பிக்கை அடிப்படையில் வெளியிட்ட ட்வீட்களுக்கு வருத்தம் தெரிவிப்பது, உண்மையானதாக இருக்காது என பூஷன் குறிப்பிட்டார். 2 முறை வாய்ப்பு வழங்கியும் பூஷண் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News