செய்திகள்
முகக்கவசம்

கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்

Published On 2020-10-01 02:15 GMT   |   Update On 2020-10-01 02:15 GMT
கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்களிடம் இருந்து ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) வெளியாகும் என்றும் மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மைசூரு, ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, கொப்பல் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது உங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, மந்திரி சுதாகர் உத்தரவிட்டார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றுவது இல்லை. குறிப்பாக மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை. முகக்கவசம் அணிபவர்களும் அதை சரியாக அணிவது இல்லை. இதனால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

பெங்களூரு நகரில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு மாநகராட்சி மார்ஷல்கள் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்த முடிவு செய்து உள்ளோம். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளோம். நாளை(இன்று) இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முகக்கவசம் என்பது வாய், மூக்கை மறைப்பதற்காக அணியப்படுவது தான். ஆனால் சிலர் மூக்கு, வாய், கன்னத்தின் கீழ் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இது முகக்கவசம் அணியாததற்கு சமம் தான். அவர்களுக்கும் இருந்தும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News