செய்திகள்
கோப்புப்படம்

முகக்கவசத்தில் பதுக்கி கடத்திய ரூ.2 லட்சம் தங்கம் சிக்கியது - கர்நாடகத்தை சேர்ந்தவர் கைது

Published On 2020-10-01 00:58 GMT   |   Update On 2020-10-01 00:58 GMT
அமீரகத்தில் இருந்து வந்த விமானத்தில் முகக்கவசத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த கர்நாடகத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுபோல் கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் தூதரக ஊழியரான சொப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவில் உள்ள விமான நிலையங்களில் தங்க கடத்தலை தடுக்க சுங்கவரித் துறையினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கரிபுரம் விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள், அவர்களது உடைமைகளை சுங்கவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி கொரோனா பரவல் தடுப்புக்காக முகத்தில் அணிந்திருந்த முகக்கவசத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதாவது என்.95 வகை முகக்கவசத்தில் சுவாசத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சுவாச துளையின் உட்புறமாக தங்கத்தை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், கைதானவர் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் பட்கலை சேர்ந்த அமீர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 40 கிராம் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News