செய்திகள்
கோப்பு படம்

மகாராஷ்டிராவில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2020-09-30 19:19 GMT   |   Update On 2020-09-30 19:19 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாட்டிலேயே அம்மாநிலத்தில் தான் வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 317 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 84 ஆயிரத்து 446 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 10 லட்சத்து 88 ஆயிரத்து 322 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 59 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 36 ஆயிரத்து 662 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருந்தது. அந்த ஊரடங்கு நேற்றுடன் (செப்டம்பர் 30) முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்கள், பார்கள் அக்டோபர் 5-ம் தேதி முதல் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News