செய்திகள்
முரளி மனோகர் ஜோஷி, அத்வானி

பாபர் மசூதி இடிப்பு வழக்கு- சிபிஐ நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு

Published On 2020-09-30 08:48 GMT   |   Update On 2020-09-30 08:48 GMT
பாபர் மசூதி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தனர்.
லக்னோ:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரும் விடுவிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்காததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தெரிவித்தார். 

இந்த தீர்ப்பை பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தனர். தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் அத்வானியின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்து பேசினார்.

லேட் ஆனாலும் நீதி வெல்லும் என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்திருப்பதாக பாகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

‘இது நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. அயோத்தியில் டிசம்பர் 6-ல் நடந்த சம்பவத்திற்கு எந்த சதியும் செய்யப்படவில்லை என்பதை இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது. எங்கள் பொதுக்கூட்டமும் பேரணிகளும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. தீர்ப்பினால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரும் இப்போது ராமர் கோவில் கட்டுமானப் பணியில் உற்சாகமாக ஈடுபடவேண்டும்’ என ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

உண்மை வென்றிருப்பதாக பாஜக தலைவர் ராம் மாதவ் கூறியுள்ளார். நமது தேசத்தின் மிகவும் மரியாதைக்குரிய தலைவர்கள் சிலருக்கு எதிரான தீங்கிழைக்கும் வழக்கு 3 தசாப்தங்களுக்குப் பிறகு வீழ்ந்துவிட்டது என்றும் அவர் கூறி உள்ளார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த தீர்ப்பை வரவேற்றிருப்பதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ‘அப்போதைய காங்கிரஸ் அரசு சாதுக்களையும், பாஜக தலைவர்களையும், விஎச்பி தலைவர்களையும் பொய்யான வழக்குகளில், வாக்கு வங்கி அரசியலுக்காக சிக்க வைத்திருக்கது என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. இந்த சதிக்கு காரணமானவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News