செய்திகள்
ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? - ராகுல் காந்தி விளக்கம்

Published On 2020-09-29 22:14 GMT   |   Update On 2020-09-29 22:14 GMT
வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்து உள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி.யும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். ஆனால் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இந்த 3 சட்டங்களும் விவசாயிகளின் இதயத்தில் கத்தியால் நேரடியாக குத்தியது போல் உள்ளது. அதனால்தான் இந்த சட்டங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

விவசாயிகளின் நலனுக்காக மட்டுமின்றி நாட்டின் நலனுக்காகவும் இந்த சட்டங்களை காங்கிரஸ் எதிர்க்கிறது. இந்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் குரலுக்கு அதிக சக்தி உள்ளது. அவர்களுடைய குரல் மூலம் இந்தியாவுக்கு மீண்டும் சுதந்திரம் கிடைக்கும்.

இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்காது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது (ஆங்கிலேயர் ஆட்சி) பருத்தி விலையை இங்கிலாந்தில் இருந்தபடி நிர்ணயித்தார்கள். அதுபோன்ற நிலைதான் மீண்டும் வரும் என்று கருகிறேன். விவசாயிகளும், சிறிய அளவில் தொழில் செய்வோரும் சுரண்டப்படுவார்கள். இதனால் விவசாயிகள் வறுமையில் தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

கொரோனா பாதிப்பு நிலவும் இந்த கால கட்டத்தில், ஏழைகளுக்கு பதிலாக பெரும் தொழில் அதிபர்களுக்கே பணம் கொடுக்கப்படுகிறது. பெரும் தொழில் அதிபர்களுக்கு ஆதரவாகவே அரசு செயல்படுகிறது. நாம் எல்லாவற்றையும் அவர்களுக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அவர்களையே சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Tags:    

Similar News