செய்திகள்
கைது

கொரோனா தாக்கி இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிய ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர் கைது

Published On 2020-09-29 07:01 GMT   |   Update On 2020-09-29 07:01 GMT
கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களிடம் நகை திருடிய சம்பவம் திருப்பதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், திருப்பதியில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வந்தது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே உள்ள சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறைகளின்படி தகனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.

அதற்கு டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் முன்பாக உங்களுடைய உறவினர்கள் அணிந்து இருக்கும் நகைகளை வீட்டில் வைத்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்க வேண்டும். இப்போது நகைகள் காணவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என அலட்சியமாக பதில் கூறி வந்தனர்.

இதையடுத்து மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமிடம் புகார் தெரிவித்தனர். அவர் திருப்பதி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கொரோனா நோயாளிகள் அணிந்திருக்கும் மோதிரங்களை கழற்றும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து அலிபிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரா வழக்கு பதிவு செய்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் திருப்பதி மல்லகுண்டாவை சேர்ந்த சுனில்குமார் (வயது 28) செட்டிபள்ளியை சேர்ந்த பாரதி (30) ஆகிய 2 பேரை கைது செய்தார்.

அவர்களிடமிருந்து 4 மோதிரம் மற்றும் ரூ.6 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களிடம் நகை திருடிய சம்பவம் திருப்பதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News