செய்திகள்
எடியூரப்பா

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்

Published On 2020-09-29 02:43 GMT   |   Update On 2020-09-29 02:43 GMT
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
பெங்களூரு :

34 இடங்களை கொண்ட முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரினார். ஆனால், மந்திரிசபை விஸ்தரிப்புக்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 26-ந் தேதி நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்த பேச்சு மீண்டும் எழத்தொடங்கியுள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பாவிடம் நிருபர்கள், மந்திரிசபையை எப்போது விரிவாக்கம் செய்ய உள்ளீர்கள் என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த எடியூரப்பா, “இன்னும் 3 நாட்களில் நான் டெல்லி செல்ல உள்ளேன். அங்கு எங்கள் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேச உள்ளேன். அதன் பிறகு மந்திரிசபை விஸ்தரிக்கப்படும்“ என்றார். மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று எடியூரப்பா கூறினாலும், மந்திரிசபையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி, தனது மந்திரி பதவியை ராஜிானமா செய்வார் என்று கூறப்படுகிறது. அதே போல் மேலும் சில மந்திரிகளும் மந்திரிசபையில் இருந்து கைவிடப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News