செய்திகள்
சி.பி.ஐ.

2019-ம் ஆண்டு நிலவரப்படி 678 வழக்குகள் சி.பி.ஐ. வசம் உள்ளன - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல்

Published On 2020-09-28 23:37 GMT   |   Update On 2020-09-28 23:37 GMT
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி சி.பி.ஐ.யிடம் 678 வழக்குகள் விசாரணையில் இருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.
புதுடெல்லி:

நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ. வசம் இருக்கும் வழக்குகளின் நிலவரங்களை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆய்வு செய்து தனது இணையதளத்தில் பதிவேற்றி உள்ளது. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி சி.பி.ஐ.யிடம் 678 வழக்குகள் விசாரணையில் இருப்பதாக அது கூறியுள்ளது.

இதில் 25 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. 86 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலும், 122 வழக்குகள் 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலும் நிலுவையில் உள்ளன. பொதுவாக ஒரு வழக்கு தொடர்பாக தகுதி வாய்ந்த அதிகாரியிடம் இருந்து அனுமதி பெற்றபின், விசாரித்து கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுடன் ஓராண்டுக்குள் விசாரணை முடிவடையும் எனக்கூறியுள்ள அந்த ஆணையம், எனினும் சில வழக்குகளில் விசாரணை தாமதமாகி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக தொடரப்பட்ட 74 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இத்தகைய வழக்குகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

இதைப்போல பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பது குறித்தும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் கவலை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக 6,226 ஊழல் வழக்குகள் பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ள ஆணையம், இதில் 182 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News