செய்திகள்
நடிகைகள் ராகிணி, சஞ்சனா

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைப்பு: நடிகைகள் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

Published On 2020-09-28 02:12 GMT   |   Update On 2020-09-28 02:12 GMT
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனு மீது இன்று(திங்கட்கிழமை) விசாரணை நடக்க உள்ளது.
பெங்களூரு :

போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் நடிகைகளின் நண்பர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகைகள் உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர். அந்த மனுக்கள் மீது 5 முறைக்கு மேல் விசாரணை நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் நடிகைகளுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அப்படி வழங்கினால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி இருந்தார்.

கடந்த 25-ந் தேதி நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீது நீதிபதி சீனப்பா தலைமையில் விசாரணை நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுக்கள் மீதான விசாரணையை 28-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். அதன்படி இன்று(திங்கட்கிழமை) நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடக்க உள்ளது.

அதன்முடிவில் தான் நடிகைகளுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுமா? என்பது தெரியவரும். இதற்கிடையே நடிகைகள் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது குறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறையினருக்கு, கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது. அதன்படி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகைகளிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் ஹவாலா பணம் பரிமாற்றம் உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து நடிகைகளிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நடிகைகளிடம் விசாரணை எதுவும் நடக்கவில்லை.
Tags:    

Similar News