செய்திகள்
கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் - மாநகராட்சி கமிஷனர் தகவல்

Published On 2020-09-27 12:27 GMT   |   Update On 2020-09-27 12:27 GMT
பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கொரோனா பரிசோதனை மாதிரி சேகரிக்கும் முகாம் நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், பெங்களூருவில் உள்ள அனைத்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் வார்டு கண்காணிப்பு அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில் மஞ்சுநாத் பிரசாத் பேசும்போது கூறியதாவது:-

குடியிருப்போர் நல சங்கங்கள், தங்களின் பகுதியில் கொரோனா பரிசோதனையை குடியிருப்போர், டிரைவர்கள், வேட்டு வேலையாளுக்கு ஏதாவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனைக்கு பரிந்துரைக்க வேண்டியது அவசியம். லேசான மற்றும் மிதமான வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களை குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கண்காணிக்க உதவ வேண்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்குதல் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவியை வழங்குதல் போன்ற உதவிகளை செய்யலாம்.

முன்னுரிமை அடிப்படையில் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய் உள்ள வயதானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மருத்துவ குழுக்களை உங்களின் பகுதிக்கு வரவழைத்து சிறப்பு முகாம்களை நடத்தி கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதற்கு தேவையான உதவிகளை மாநகராட்சி செய்யும். பொதுமக்களிடையே, பரிசோதனை மற்றும் நோய் தொற்றை முன்கூட்டியே கண்டறிந்தால் மரணத்தை தவிர்க்க முடியும் என்பதை விழிப்புணர்வு செய்யலாம்.

அனைத்து வார்டுகள், பூத் மட்டத்தில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும். இதற்கு குடியிருப்போர் நல சங்கங்கள் உதவ வேண்டும். இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் நிற்கவில்லை. தற்போது தான் கடும் சவால் உள்ளது. ஏனென்றால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளதால் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனால் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் பேசினார்
Tags:    

Similar News