செய்திகள்
விபத்துக்குள்ளான கார்

பிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் கோர விபத்து - கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாப பலி

Published On 2020-09-27 10:28 GMT   |   Update On 2020-09-27 10:28 GMT
பிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த கோர விபத்தில் கர்ப்பிணி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூர்:

கர்நாடக மாநிலம் கலபுரஹு மாவட்டம் அலண்ட் நகரை சேர்ந்தவர் இஃப்ரானா பேஹம் (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டது. 

இதனால், குடும்பத்தினர் இஃப்ரானா பேஹமை பிரசவத்திற்காக கார் மூல கலபுரஹாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த காரில் கர்ப்பிணி இஃப்ரானா பேஹம் (25), அவரது உறவினர்களான ரூபியா பேஹம் (50), ஜெயஹுன்பி (60), முனீர் (28), முகமது அலி (38), சௌகித் அலி (29) என மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர்.

கலபுரஹாவில் உள்ள மருத்துவமனை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தபோது சவலஹு என்ற கிராமம் அருகே உள்ள சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் பயங்கர
வேகத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் காரும், லாரியும் சாலையை விட்டு விலகி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி இஃப்ரானா பேஹம் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

லாரி மீது கார் மோதிய விபத்தில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News