செய்திகள்
கோப்புப்படம்

தர உத்தரவாத இயக்குனரகத்திடம் பினாகா ராக்கெட் அமைப்பு ஒப்படைப்பு - ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும்

Published On 2020-09-26 20:27 GMT   |   Update On 2020-09-26 20:27 GMT
பினாகா ராக்கெட் அமைப்பு, தர உத்தரவாத இயக்குனரகத்திடம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் ஒப்படைக்கப்பட்டது.
பாலாசூர்:

பினாகா ராக்கெட் அமைப்பு, தர உத்தரவாத இயக்குனரகத்திடம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் ஒப்படைக்கப்பட்டது. இந்த ராக்கெட் அமைப்பு, ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் சக்தி கொண்டதாகும்.

புனேயில் உள்ள டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வுக்கூடம், ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஏ.ஆர்.டி.இ.) ஆகியவை உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் (எச்.இ.எம்.ஆர்.எல்), வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (வி.ஆர்.டி.இ.), செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையம் (சி.ஏ.இ.ஆர்.) ஆகியவற்றுடன் இணைந்து பினாகா ராக்கெட் அமைப்பை வடிவமைத்து உருவாக்குகின்றன.

இந்த ராக்கெட் அமைப்பு முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சம், ஒரே நேரத்தில், 44 வினாடிகளில் 12 ராக்கெட்டுகளை ஏவி, வெவ்வேறு இலக்கு களை மிகத்துல்லியமாக தாக்கி அழிப்பதுதான். அதிகபட்சம் 37.5 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை இவை தாக்கி அழிக்கும்.

இந்த பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் அதன் தரை அமைப்புகள் தற்போது பெரிய அளவில் போர்த்தளவாட தொழிற்சாலைகள், பி.இ.எம்.எல்., பி.இ.எல்., டாடா பவர், எல் அண்ட் டி டிபன்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பினாகா ராக்கெட் அமைப்பை பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் வரும் தர உத்தரவாத இயக்குனரகத்திடம், புனேயில் நடந்த நிகழ்ச்சியின்போது டி.ஆர்.டி.ஓ. அமைப்பு ஒப்படைத்தது.

இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியாக டி.ஆர்.டி.ஓ. தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “இந்த நிகழ்வானது, பினாகா ராக்கெட் அமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். பினாகா ராக்கெட் அமைப்பு, சேவைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் நீண்ட தூரம் செல்லும்” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News