செய்திகள்
கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ. 5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை

Published On 2020-09-26 02:48 GMT   |   Update On 2020-09-26 02:48 GMT
கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க தனியார் மருத்துவமனை ரூ.5¾ கோடி கேட்டதால், அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
பெங்களூரு :

ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் சுவாமி (வயது 62). இவர், பெங்களூரு ஸ்ரீநகரில் தங்கி இருந்து பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சுவாமி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) சுவாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதற்காக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி சுவாமி பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் பற்றிய எந்த தகவலும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை. பின்னர் ஹாசனில் வசிக்கும் சகோதரர் சீனாவை செல்போனில் தொடர்பு கொண்டு, சுவாமி உயிர் இழந்து விட்டது பற்றி தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, சீனா, அவரது குடும்பத்தினர் சுவாமியின் உடலை வாங்கி செல்ல வந்தனர். அப்போது சுவாமிக்கு சிகிச்சை அளித்ததற்காக ரூ.5¾ லட்சம் வழங்கும்படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக தெரிகிறது.

ஆனால் சீனா உள்பட குடும்பத்தினர் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், ரூ.2 லட்சம் வரை திரட்டி கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், சுவாமியின் உடலை வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கொரோனாவுக்கு சுவாமி உயிர் இழந்திருப்பதால், மாநகராட்சி சார்பில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மீதி ரூ.4 லட்சத்தை கொடுக்கும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால் ரூ.2 லட்சம் மட்டுமே தருவோம் என்று கூறியதுடன், சீனா உள்பட குடும்பத்தினர் ஹாசனுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். பின்னர் அங்கு வைத்து உயிர் இழந்த சுவாமிக்கு திதியும் கொடுத்தனர். பணம் கொடுக்க முடியாததால் சுவாமியின் உடலை வாங்காமல் குடும்பத்தினர் திதி கொடுத்திருந்தனர். பின்னர் கடந்த 18-ந் தேதி ரூ.2 லட்சமும், வெற்று காசோலையையும் கொடுத்துவிட்டு சுவாமியின் உடலை எடுத்து செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் வெற்று காசோலை கொடுக்க சீனா மறுத்து விட்டார். இதனால் மருத்துவமனையிலேயே சுவாமியின் உடல் இருந்தது.

சுவாமியின் உடலை வாங்க குடும்பத்தினர் முன்வராததால், வேறு வழியின்றி பணம் எதுவும் வாங்காமல், அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதுபற்றி ஹாசனில் வசிக்கும் சீனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுவாமியின் உடலை வாங்க குடும்பத்தினர் வந்துள்ளனர். ஆனால் சுவாமியை மருத்துவமனையில் சேர்க்கும் போது நிர்மலா என்பவர், அவரது மனைவி என்று கூறி சேர்த்ததுடன், கையெழுத்தும் போட்டு இருந்தார். ஆனால் அந்த நிர்மலா சுவாமியின் மனைவி இல்லை என்று தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சுவாமியை சேர்த்த பின்பு நிர்மலா ஒரு முறை கூட வரவில்லை.

இதனால் நிர்மலா யார்?, எதற்காக அவர் தனது கணவர் என்று கூறி சுவாமியை மருத்துவமனையில் சேர்த்தார்? என்பது தெரியவில்லை. இந்த குழப்பத்தின் காரணமாக சுவாமியின் உடலை, அவரது சகோதரரிடம் மருத்துவமனை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் நிர்மலா என்பவர் வந்து கேட்டால், என்ன செய்வது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவுக்கு சுவாமி பலியாகி 14 நாட்கள் ஆகியும், அவரது உடல் மருத்துவமனையிலேயே உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News