செய்திகள்
எடியூரப்பா

எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பணியை காங்கிரஸ் செய்யட்டும்: எடியூரப்பா

Published On 2020-09-26 02:42 GMT   |   Update On 2020-09-26 02:42 GMT
எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பணியை காங்கிரஸ் செய்யட்டும் என்று நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா, தனது அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியினர் எனது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்துள்ளனர். இதேபோல் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையும் காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரட்டும். இதன் மூலம் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பணியை அவர்கள் செய்யட்டும். கர்நாடகத்தில் தொழில் துறை தொடர்பான பணிகளுக்கு 2 சதவீத நிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நில சீர்திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. இதுகுறித்து விவசாயிகளை நேரில் அழைத்து பேச உள்ளேன். நீர்ப்பாசன வசதி கொண்ட நிலத்தை வாங்குபவர்கள், அந்த நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளோம். நில சீர்திருத்த சட்டம், வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதாக்களால் விவசாயிகள் பயப்பட தேவை இல்லை. இந்த மசோதாக்கள் சட்டங்களாக அமலுக்கு வந்தால் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும்.

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள். புதிய சட்ட திருத்தங்களால் இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். விவசாயிகள் நேரடியாக தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்யலாம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News