செய்திகள்
சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி

போதைப்பொருள் விவகாரத்தில் கைது: நடிகைகளிடம் 5 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

Published On 2020-09-25 02:25 GMT   |   Update On 2020-09-25 02:25 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகியோரிடம் 5 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு அனுமதி வழங்கி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு :

கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது, போதைப்பொருட்கள் விற்பனையாளர்களுடன் தொடர்பு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து நடிகைகள் 2 பேரும் பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

போதைப்பொருள் விவகாரத்தில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சீனப்பா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கடந்த 21-ந் தேதி இந்த மனுக்களை விசாரித்த கோர்ட்டு, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை 24-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நீதிபதி சீனப்பா முன்னிலையில் நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவு பெறாததால், நடிகைகளுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும், அவ்வாறு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே ஜாமீன் வழங்க கூடாது என்றும் வாதிட்டார். ஆனால் நடிகைகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.

இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளை (அதாவது இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இதனால் நேற்று ஜாமீனில் வெளியே வந்து விடலாம் என்று நினைத்த நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், நடிகைகள் 2 பேருக்கும் மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

அதாவது நேற்று நடந்த ஜாமீன் மனுக்கள் விசாரணையின் போது அரசு தரப்பு வக்கீல் பிரசன்னகுமார், அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் நடிகைகள் உள்பட 5 பேர் போதைப்பொருட்கள் விவகாரத்தில் கைதாகி இருந்தாலும், அவர்கள் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரம் குறித்து அவர்கள் 5 பேரிடமும் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 5 பேரிடமும் அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்து சிறைக்கு சென்றே நடிகைகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இன்று ஜாமீன் கிடைத்தால், அமலாக்கத்துறையினர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெறும். இதன் காரணமாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
Tags:    

Similar News