செய்திகள்
மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி

டெல்லியில் மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி உடல் அடக்கம் - மத்திய மந்திரிசபை இரங்கல்

Published On 2020-09-24 22:30 GMT   |   Update On 2020-09-24 22:30 GMT
கொரோனாவால் மரணமடைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்காடியின் உடல் டெல்லியில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:

ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.

சுரேஷ் அங்காடி, கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கொப்பா கிராமத்தை சேர்ந்தவர். பெலகாவி மக்களவை தொகுதியில் இருந்து 2004-ம் ஆண்டு தேர்தலில் இருந்து தொடர்ந்து 4 தடவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சுரேஷ் அங்காடியின் உடலை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய அவருடைய குடும்பத்தினர் விரும்பினர். ஆனால், கொரோனா மரணங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவரது உடலை கொண்டு செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

இதனால், டெல்லியிலேயே உடல் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, டெல்லி துவாரகா இடுகாட்டில் நேற்று சுரேஷ் அங்காடி உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதில், குறைந்த அளவிலான குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், சுரேஷ் அங்காடி மறைவுக்காக 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், ஒரு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுரேஷ் அங்கடி மறைவு மூலம், ஒரு சிறந்த தலைவரையும், கல்வியாளரையும், சிறந்த நாடாளுமன்றவாதியையும், திறமையான நிர்வாகியையும் நாடு இழந்து விட்டது.

அவரது மறைவுக்கு மந்திரிசபை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய இணைமந்திரி சுரேஷ் அங்காடி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News