செய்திகள்
கோப்பு படம்

ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? உள்பட 20 கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசிடம் தரவுகள் இல்லை...

Published On 2020-09-24 22:21 GMT   |   Update On 2020-09-24 22:21 GMT
ஊரடங்கால் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் உள்பட 20 கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசிடம் எந்த வித தரவுகளும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.




புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு நோக்கி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
ஆனால், பல்வேறு கேள்விகளுக்கு தங்களிடம் தரவுகள் இல்லை (No Data Available) என மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்த பதில்கள் மட்டுமல்லாமல் மத்திய அரசிடம் எந்தெந்த கேள்விகளுக்கு தரவுகள் இல்லை என்பது தொடர்பான பதிவு ஒன்றை பிரபல
ஆங்கில செய்தி தளமான ‘தி நியூஸ் மினிட்’ தொகுத்து வழங்கியுள்ளது. இந்த செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு தங்களிடம்
தரவுகள் இல்லை என கூறிய துறைகளும், எஞ்சியவை அந்ததந்த துறை சார்ந்த மந்திரிகள் அளித்த விளக்கம், துறை சார்ந்த அதிகாரப்பூர்வ இணைய தள பக்கங்களில் உள்ள பதிவுகள்,
தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் தொகுப்பு ஆகும்.    

மத்திய அரசிடம் எந்த வித தரவுகளும் இல்லாத 20 கேள்விகள்:-

1) நாட்டில் மருத்துவத்துறையினர் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது?

2) கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் எத்தனை பெண் அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் வேலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

3) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் எத்தனை பெண் பிள்ளைகள் பள்ளிக்கூட்ட படிப்பை நிறுத்தியுள்ளனர்.

4) ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

5) நாட்டில் உள்ள மொத்த பிளாஸ்மா வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

6) ஊரடங்கு அமல்படுத்தியது முதல் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

7) ஊரடங்கு அமல்படுத்தியதால் இன்னும் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர்.

8) ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் வேலையிழந்துள்ளனர்?

9) ஊரடங்கால் எத்தனை சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் இழந்து மூடப்பட்டுள்ளன.

10) அமைப்பு சாரா தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

11) தகவலறியும் உரிமை சட்டத்தை அதிக அளவில் பயன்படுத்து ஆர்வலர்கள் (ஆர்டிஐ ஆர்வலர்) எத்தனை பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

12) கொரோனா வைரசால் எத்தனை போலீசார் உயிரிழந்துள்ளனர்.

13) ஊரடங்கை அமல்படுத்தும்போது பொதுமக்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாகவும், அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் எத்தனை போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

14) அரசியல்வாதிகள் எத்தனை பேர் சிறையில் உள்ளனர்.

15) உலக ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது.

16) ஊரடங்கு காலத்தில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

17) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தை சேர்ந்த எத்தனைபேர் இந்திய குடியுரிமை பெற குடியுரிமை திருத்தச்சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர்.   

18) வதந்தி மற்றும் போலி செய்திகளால் எத்தனைபேர் உயிரிழந்துள்ளனர்.

19) விவசாய கடன்களால் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

20) பத்திரிக்கையாளர்கள் எத்தனைபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எந்த தரவுகளும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News