செய்திகள்
சல்மான் குர்ஷித்

டெல்லி கலவர வழக்கு- காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு

Published On 2020-09-24 08:14 GMT   |   Update On 2020-09-24 08:14 GMT
டெல்லி கலவர வழக்கு தொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை தூண்டியவர்கள், ஆத்திரமூட்டும் வகையில் பேசியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 

இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல்துறை, கடந்த 17ம்  தேதி புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 17000 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சல்மான் குர்ஷித்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், உமர் காலித், நதீம் கான் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. இந்த வழக்கில் முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

டெல்லியில் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு தர்ணா போராட்டத்தின்போது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரத்தை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை. பாதுகாப்பு கருதி சாட்சியின் பெரும் குறிப்பிடப்படவில்லை. கலவரத்தைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குழுவின் ஒரு பகுதியாக இந்த சாட்சி இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சாட்சியின் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி கலவர வழக்கில் இதுவரை காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ள மிக முக்கிய அரசியல் தலைவர் குர்ஷித் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த குர்ஷித், ‘குப்பைகளை சேகரிக்கும்போது, நிறைய அசுத்தங்கள் கிடைக்கும். எந்தவொரு குப்பையையும் தனிநபர்களின் வாக்குமூலத்திற்கு ஆதரவாக வைக்கலாம். இந்த விஷயத்தில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியது என்ன என்பதை அறிவதில் ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார்.

நான் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக சாட்சி பொய் சொல்லவில்லை என்றால், அவரது வாக்குமூலம் மீது  காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதா? அவர்கள் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த வாக்குமூலத்திற்கு என்ன மதிப்பு? என்றும் குர்ஷித் கேள்வி எழுப்பினார்.
Tags:    

Similar News