செய்திகள்
சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகளுக்கு ஜாமீன் கிடைக்குமா?: இன்று தெரியும்

Published On 2020-09-24 02:29 GMT   |   Update On 2020-09-24 02:29 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகைகள் ராகிணி, சஞ்சனாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும்.
பெங்களூரு :

கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது, விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்தது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணி திவேதி கடந்த 14-ந் தேதியில் இருந்தும், நடிகை சஞ்சனா கல்ராணி 16-ந் தேதியில் இருந்தும் பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். மேலும் சிறைவாசம் அனுபவித்து வரும் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 21-ந் தேதி நடந்த விசாரணையின் போது 2 பேரின் ஜாமீன் மனுக்களும் 24-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்கள் மீது சிறப்பு கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடைபெற உள்ளது.

இதனால் இன்று தங்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும், சிறையில் இருந்து வெளியே வந்து விடலாம் என்றும் 2 நடிகைகளும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்களுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? அல்லது மீண்டும் விசாரணை தள்ளி வைக்கப்படுமா? என்பது தெரியவரும்.
Tags:    

Similar News