செய்திகள்
சித்தராமையா

எடியூரப்பா தலையிட்டதால் ரூ.200 கோடி முறைகேடு தடுக்கப்பட்டது: சித்தராமையா தகவல்

Published On 2020-09-24 02:19 GMT   |   Update On 2020-09-24 02:19 GMT
10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதில் எடியூரப்பா தலையிட்டதால் ரூ.200 கோடி முறைகேடு தடுக்கப்பட்டதாக சட்டசபையில் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் நேற்று கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் குறித்த விவாதத்திற்கு மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பதிலளித்து பேசினார். அப்போது வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் குறுக்கிட்டு பேசும்போது, “பெங்களூரு சர்வதேச மாநாட்டு அரங்கத்தில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததில் ரூ.200 கோடி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பத்திரிகைகளில் செய்திகளும் வந்தன. ஆனால் அதற்கு அரசு ரூ.11.80 கோடி மட்டுமே செலவு செய்துள்ளது. இதில் ரூ.200 கோடி முறைகேடு எப்படி நடக்கும்?“ என்றார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசுகையில் கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூரு சர்வதேச அரங்கத்தில் தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அதில் 10 ஆயிரம் படுக்கைகள் அமைப்பதாக அரசு சொன்னது. ஒரு படுக்கைக்கு ஒரு நாளைக்கு ரூ.800 வாடகை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அதன்படி பார்த்தால் இதில் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக நாங்கள் கூறினோம்.

இதுகுறித்து செய்திகள் வெளியானதும், முதல்-மந்திரி எடியூரப்பா தலையிட்டதால் அந்த ரூ.200 முறைகேடு தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த வாடகையை முடிவு செய்தது யார்?. நான் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். அங்கு இருந்த அதிகாரிகளிடம் விசாரித்தபோது, வாடகை குறித்த தகவல் எனக்கு கிடைத்தது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News