செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

தங்கம் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷிடம் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி

Published On 2020-09-23 23:38 GMT   |   Update On 2020-09-23 23:38 GMT
தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷிடம் மீண்டும் 4 நாட்கள் என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்நாயர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைதாகி சிறையில் உள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மந்திரி ஜலீலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மந்திரி ஜலீல் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே சமயத்தில், தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபராக உள்ள ஸ்வப்னா சுரேஷிடம் மீண்டும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. முடிவு செய்தது.

ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பது என்.ஐ.ஏ.வுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்வப்னா சுரேஷால் அளிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை என்.ஐ.ஏ. மீட்டது. அதில் உள்ள தகவலும், போலீசாரிடம் ஸ்வப்னா சுரேஷ் ஏற்கனவே அளித்த வாக்குமூலமும் வேறு விதமாக இருந்துள்ளது. எனவே தான் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கோர்ட்டிலும் என்.ஐ.ஏ. சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் 4 நாட்கள் ஸ்வப்னா சுரேஷை காவலில் விசாரணை நடத்த என்.ஐ.ஏ.க்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயருக்கு கொச்சி கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை தொடர்ந்து சந்தீப் நாயருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனாலும் அவர் மீதான என்.ஐ.ஏ வழக்கு நிலுவையில் உள்ளதால் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலை உள்ளது.
Tags:    

Similar News