செய்திகள்
டி.டி.வி.தினகரன்

சிறையில் சசிகலாவை சந்திக்க டி.டி.வி.தினகரன் பெங்களூரு பயணம்

Published On 2020-09-23 08:28 GMT   |   Update On 2020-09-23 12:33 GMT
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றுள்ளார்.

பெங்களூரு:

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சசிகலா இந்த மாதம் இறுதியில் விடுதலையாக வாய்ப்புள்ளது என்ற தகவல் பரவியது. இந்த தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அடுத்த வருடம் ஜனவரி 27-ந் தேதி சசிகலா விடுதலையாவார் என்று கர்நாடக மாநில சிறைத்துறை அதிகார பூர்வமாக  அறிவித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு பா.ஜனதாவின் மனநிலை என்ன? என்பதனை தெரிந்து கொள்ள முக்கிய தலைவர்களை சந்திக்க டி.டி.வி.தினகரன் தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் சுமார் 4 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் டெல்லி சென்ற தினகரனுக்கு பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களை சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாகவே அவர் தனி விமானத்தில் டெல்லி சென்றதாகவும் கூறப்படுகிறது. சுமார் 1½ மணி நேரம் பா.ஜனதா முக்கிய தலைவரையும், இதன் தொடர்ச்சியாக வீடியோ கான்பிரன்சிங் மூலம் மற்றொரு தலைவரிடம் 15 நிமிடமும் டி.டி.வி. தினகரன் பேசியிருக்கிறார். அப்போது தங்களது நிலைப்பாடு மற்றும் தேவையான உதவி குறித்தும் தினகரன் கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட பா.ஜனதா வரும் சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. இருப்பதையே விரும்புகிறது. இந்த தேர்தலில் இணைந்து செயல்படுங்கள். முதல்வர் யார் என்பது குறித்தும் மற்றும் கட்சி எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் மத்திய உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் பா.ஜனதாவின் நிலைப்பாடு குறித்து விளக்கியிருக்கிறார்.

இவற்றைக் கேட்டுக் கொண்ட தினகரன் தங்களது முடிவை பின்னர் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். இந்த சந்திப்பிற்கு பிறகு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த அவர் நேற்று மதியம் பெங்களூரு சென்று இருக்கிறார். மார்ச் மாதத்திற்கு பிறகு சுமார் 5 மாதகாலத்திற்கு பிறகு பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து டெல்லியில் நடந்த சம்பங்களை விளக்க திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து கர்நாடக சிறைத்துறையிடம் கேட்டபோது, டி.டி.வி.தினரகன் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கவில்லை என்று மறுத்துள்ளனர்.

Tags:    

Similar News