செய்திகள்
பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி பி.முரளீதரன்

பாராளுமன்றம் இன்று காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படும்- மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

Published On 2020-09-23 05:05 GMT   |   Update On 2020-09-23 05:05 GMT
பாராளுமன்றத்தில் இன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுகிறது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இரு சபைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி சபைகள் இயங்கின. உறுப்பினர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக, இரு அவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. கொரோனா கால விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பாராளுமன்ற அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் தினந்தோறும் துரித ஆன்டிஜன் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதேசமயம் எம்பிக்கள் 8  பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அவையை புறக்கணித்துள்ளன.

எனவே அக்டோபர் 1-ந் தேதி முடிய உள்ள நிலையில் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய ஆலோசனையின்போது, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

இந்த சூழ்நிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடியது. அப்போது, பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி பி.முரளீதரன் பேசுகையில், ‘பாராளுமன்றத்தை இன்று காலவரம்பின்றி ஒத்திவைப்பதற்கு பரிந்துரை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்கு முன்பாக நிறைவேற்றப்பட வேண்டிய சில முக்கியமான பாராளுமன்ற அலுவல்கள் உள்ளன.

நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது விவாதித்து நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற ஆலோசனைக் குழு நேற்று பரிந்துரை செய்தபடி நேரம் ஒதுக்கப்படும்’ என்றார்.
Tags:    

Similar News