செய்திகள்
திருப்பதி ரிங் ரோட்டில் சாலையை கடக்கும் 3 சிறுத்தைகளை படத்தில் காணலாம்.

திருப்பதி கோவில் அருகே சிறுத்தைகள், கரடி நடமாட்டம்

Published On 2020-09-23 00:27 GMT   |   Update On 2020-09-23 00:27 GMT
திருப்பதி கோவில் அருகே சிறுத்தைகள், கரடி நடமாடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பக்தர்கள் வருகை குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி வனவிலங்குகள் சாலைகளில் நடமாடுகின்றன. வழக்கமாக மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவை சாலையை கடந்து செல்லும். கடந்த 6 மாதமாக சிறுத்தை, கரடி, நரி உள்ளிட்டவை பக்தர்கள் நடமாட்டமுள்ள ரிங் சாலை, ஜி.என்.சி. சோதனைச்சாவடி, வெங்கடேஸ்வரா பக்தர்கள் ஓய்வறை, பாபவிநாசம் சாலை ஆகிய இடங்களில் சுற்றி வருகின்றன.

வனவிலங்குகள் வந்தால் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் அலாரம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 சிறுத்தைகள் திருமலை ரிங் ரோட்டில் சாலையை கடந்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மேலும் ஒரு கரடி பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் கடந்தது தெரிந்தது. இதனால் உள்ளூர் மக்கள், பக்தர்கள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர், வனவிலங்குகள் நடமாட்டமுள்ள பகுதிகளில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் தனியாக செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் உள்ளதால் திருமலை மலைப்பாதையில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News