செய்திகள்
சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி

போதைப்பொருள் விவகாரத்தில் கைது: நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 24-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2020-09-22 07:03 GMT   |   Update On 2020-09-22 07:03 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகைகள் ராகிணி, சஞ்சனாவின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு :

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை, கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம், விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 13 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை சிறப்பு கோர்ட்டு நீதிபதி சீனப்பா தலைமையில் நடைபெற்று வருகிறது.

கடந்த 19-ந் தேதி நடந்த விசாரணையின் போது போதைப்பொருள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கும்படி அரசு வக்கீல் நீதிபதியிடம் கேட்டு இருந்தார். அதற்கு அவகாசம் வழங்கி ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, நேற்று நீதிபதி சீனப்பா தலைமையில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், போதைப்பொருள் விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், நடிகைகள் உள்பட போதைப்பொருள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார்.

இதற்கு நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் தெரிவித்தனர். மேலும் நடிகை ராகிணி திவேதி தரப்பில் ஆஜராக வாதாடிய வக்கீல், “ராகிணி திவேதி வீட்டில் சோதனை நடத்த போலீசார் கோர்ட்டு மூலமாக முறையாக அனுமதி பெற்று, சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் எந்த ஒரு போதைப்பொருட்களும் கிடைக்கவில்லை. ராகிணி திவேதி மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்திற்கும் அவருக்கும் தொடர்பு மற்றும் ஆதாரங்கள் இல்லாததால் ஜாமீன் வழங்க வேண்டும்,“ என்று கூறினார்

அதுபோல, நடிகை சஞ்சனா கல்ராணி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாத காரணத்தால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வக்கீல் வாதிட்டார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சீனப்பா, நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஏமாற்றம் அடைந்தார்கள்.

மேலும் நேற்றும் ஜாமீன் கிடைக்காத காரணத்தால் 2 நடிகைகளும் வருகிற 24-ந் தேதி வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அன்றைய தினம் ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி காத்திருக்கின்றனர்.

போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகை சஞ்சனா கல்ராணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த ஜாமீன் மனு வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிறையில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். ஏற்கனவே தான் சிறையில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்று காவலர்களிடம் அவர் கூறி வந்துள்ளார். மேலும் சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்ததாகவும், இதுபற்றி நடிகை ராகிணி திவேதியிடம் அவர் கூறி இருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் ஜாமீன் கிடைக்காததால் தனது அறையில் நடிகை சஞ்சனா கல்ராணி கண்ணீர் விட்டு கதறி அழுததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Tags:    

Similar News