செய்திகள்
லாட்டரி

கேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்

Published On 2020-09-22 05:24 GMT   |   Update On 2020-09-22 05:24 GMT
ஓணப்பண்டிகையையொட்டி கேரள அரசின் காருண்யா பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடியை இடுக்கியை சேர்ந்த 24 வயதான கோவில் ஊழியருக்கு கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் அரசே லாட்டரி விற்பனை செய்கிறது.

ஓணப்பண்டிகையையொட்டி கேரள அரசின் காருண்யா பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இதன் குலுக்கல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது.

இதில் முதல் பரிசு ரூ.12 கோடியாகும். குலுக்கல் முடிந்ததும் முதல் பரிசுக்குரிய சீட்டை வாங்கிய நபரை அதிகாரிகள் தேடினர்.

இதில் ரூ.12 கோடிக்கான முதல் பரிசுக்குரிய சீட்டை வாங்கியது இடுக்கியை சேர்ந்த 24 வயது வாலிபர் அனந்து விஜயன் என தெரியவந்தது.

இவர் தற்போது எர்ணாகுளம் அருகில் உள்ள பொன்னீத் கோவிலில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு பெற்றோரும், ஒரு சகோதரரும், சகோதரியும் உள்ளனர்.

ரூ.12 கோடி பரிசு விழுந்ததும் அருகில் உள்ள வங்கி மானேஜர் வீட்டுக்கே வந்து வாழ்த்து தெரிவித்ததோடு பரிசு விழுந்த சீட்டை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யும்படியும் கூறினார்.

பரிசு விழுந்தது பற்றி அனந்து கூறியதாவது:-

ஓணம் பம்பர் லாட்டரி வாங்கியதும், எனக்குதான் முதல் பரிசு விழும் என்று நண்பர்களிடம் விளையாட்டாக கூறினேன். அது அப்படியே பலித்துவிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஆனால் அது நடந்து விட்டது. பணம் கைக்கு வந்த பிறகு அதனை என்ன செய்வது என்பது பற்றி முடிவு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனந்து விஜயனுக்கு ஏஜெண்டு கமி‌ஷன், வரி பிடித்தம் போக ரூ.7 ½ கோடிக்கு மேல் கிடைக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே ஓண லாட்டரியில் 2-வது பரிசு 6 பெண்கள் இணைந்து வாங்கிய சீட்டுக்கு கிடைத்துள்ளது.

திருச்சூர் அருகே அடுத்தடுத்து வசிக்கும் துர்கா, ஓமனா, திரேசா,அனிதா, சிந்து மற்றும் ரதி ஆகியோர் சேர்ந்து தலா ரூ.100 கொடுத்து ஒரு லாட்டரி வாங்கினர். அதற்குதான் 2-வது பரிசான ரூ.1 கோடி விழுந்துள்ளது. இதனால் அந்த 6 பெண்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
Tags:    

Similar News