செய்திகள்
கோப்புப்படம்

வங்கிகளில் ரூ.1,400 கோடி மோசடி - 8 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

Published On 2020-09-21 23:55 GMT   |   Update On 2020-09-21 23:55 GMT
வங்கிகளில் ரூ.1,400 கோடி மோசடி தொடர்பாக குவாலிட்டி லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
புதுடெல்லி:

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் “குவாலிட்டி லிமிடெட்” என்கிற நிறுவனம் பாலில் இருந்து கிடைக்கும் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் நிறுவனரான சஞ்சய் திங்க்ரா, சித்தாந்த் குப்தா, அருண் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கி கூட்டமைப்பை ஏமாற்றி சுமார் ரூ.1,400 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக “குவாலிட்டி லிமிடெட்” நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லி மட்டுமின்றி உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News