செய்திகள்
ப. சிதம்பரம்

விவசாயிகளிடம் பொய் பேசுவதையும், தவறான வாக்குறுதி கொடுப்பதையும் மோடி அரசு நிறுத்த வேண்டும்: ப. சிதம்பரம்

Published On 2020-09-21 12:51 GMT   |   Update On 2020-09-21 12:51 GMT
நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் என்று விவசாய அமைச்சர் கூறுகிறார். தனியார் வர்த்தகம் இன்றும் நடைபெறுகிறது. விவசாயிக்கு செலுத்தப்படும் விலை, குறைந்தபட்ச ஆதரவை விட குறைவாகவே உள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) வேளாண் அமைச்சரால் உறுதிப்படுத்த முடிந்தால், அவர் ஏன் இதுவரை அவ்வாறு செய்யவில்லை? எந்த விவசாயி தனது விளைபொருட்களை எந்த வர்த்தகருக்கு விற்றார் என்பதை அமைச்சருக்கு எப்படித் தெரியும்? நாடு முழுவதும் தனியார் மூலம் ஒவ்வொரு நாளும் நடக்கும் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை அவர் எவ்வாறு அறிந்து கொள்வார்?

அவரிடம் தரவு இல்லையென்றால், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை செலுத்தப்படுவதை அவர் எவ்வாறு உத்தரவாதம் செய்வார்? அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியை நம்புவதற்கு விவசாயிகள் மிகவும் முட்டாள்கள் என்று அமைச்சரும் அரசாங்கமும் நினைக்கிறார்களா?.

ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வைக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா? ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உறுதிமொழியை மோடி அரசு நிறைவேற்றியதா?.’’

இவ்வாறு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News