செய்திகள்
எம்.பி.க்கள் போராட்டம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-21 07:50 GMT   |   Update On 2020-09-21 07:50 GMT
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று 2 முக்கிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. விவாதம் முடிந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்ததுடன்,  அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை கிழித்து வீசினர். 

மாநிலங்களவையில் அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவையை நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனுவும் அளித்தனர். 

இன்று காலை மாநிலங்களவை மீண்டும் கூடியபோது, நேற்று அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 8 உறுப்பினர்களை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். 

பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டதும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 உறுப்பினர்கள் உள்பட, எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News