செய்திகள்
பாராளுமன்றம்

மாநிலங்களவையில் காங்., தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் உறுப்பினர்கள் ஜீரோ ஹவர் நோட்டீஸ்

Published On 2020-09-21 06:14 GMT   |   Update On 2020-09-21 06:14 GMT
வங்கி கடன், தலித்துக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதிப்பதற்கு எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு மத்தியில் வேளாண் மசோதாக்களில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாநிலங்களவை இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூடியது. இன்றைய கூட்டத்தொடரின் ஜீரோ ஹவர் விவாதம் தொடர்பாக உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கினர்.

வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பது குறித்து விவாதிக்கும்படி காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது தொடர்பாக தெலுங்குதேசம் கட்சி எம்பி ரவீந்திர குமாரும், பாரதீப் துறைமுகத்திற்கு ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் பெயரை வைப்பது தொடர்பாக பிஜு ஜனதா தளம் எம்பி பிரசன்ன ஆச்சார்யாவும் நோட்டீஸ் அளித்தனர்.

நேற்று அவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளின் 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அத்துடன், துணை சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள்  அளித்த நம்பிக்கையில்லா தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News