செய்திகள்
சித்தராமையா குமாரசாமி

மதசார்பற்ற ஜனதா தளம் சந்தர்ப்பவாத கட்சியா?: சித்தராமையாவை சாடிய குமாரசாமி

Published On 2020-09-21 02:02 GMT   |   Update On 2020-09-21 02:02 GMT
ஜனதா தளம்(எஸ்) கட்சியை சந்தர்ப்பவாத கட்சி என்று கூறிய சித்தராமையாவை குமாரசாமி கடுமையாக தாக்கி கருத்து வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அதிகார ஆசைக்காக காங்கிரசுக்கு சென்ற சித்தராமையா, ஜனதா தளம்(எஸ்) கட்சியை சந்தர்ப்பவாத கட்சி என்று குறை கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தனது பச்சோந்தி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். எங்கள் கட்சியில் பதவி, அதிகாரத்தை அனுபவித்து விட்டு தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசுக்கு சென்ற சித்தராமையா தான் சந்தர்ப்பவாதி. அத்தகையவரிடம் இருந்து சுயமரியாதை பாடத்தை கற்க வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் முதல்-மந்திரியாக இருந்தபோதே, காங்கிரசை அழிக்க வேண்டும் என்று கூறியவர். இதன் மூலம் நீங்கள் எத்தகைய மோசமான அரசியல்வாதி என்பது இந்த நாட்டுக்கே தெரியும். சுயமரியாதையை காக்க தேவேகவுடா பிரதமர் பதவியை தியாகம் செய்தார். அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர் பிரதமர் பதவியில் இருந்திருப்பார். தேவேகவுடாவின் சுயமரியாதை அரசியலை இவ்வளவு வேகமாக நீங்கள் மறந்து விட்டீர்களா?. மனசாட்சி மோசடி அரசியல்வாதியிடம் இருந்து எங்கள் கட்சி கற்பது ஒன்றும் இல்லை.

ஜனதா தளம்(எஸ்) ஆட்சி பீடத்தில் இருந்தபோதெல்லாம், மக்களின் கஷ்டங்களை தீர்க்க பாடுபட்டுள்ளது. அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நாங்கள் எப்போதும் ஆணவப்போக்குடன் நடந்துகொள்ளவில்லை. ஆட்சியில் இருந்த குறுகிய காலத்திலும் நாங்கள் மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளோம். உங்களின் சுயநல அரசியலை மூடிமறைக்க எங்கள் கட்சியை குறை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News