செய்திகள்
மத்திய மந்திரி ஹர்சவர்தன்

உமிழ்நீர் அடிப்படையில் கொரோனா பரிசோதனை- மத்திய மந்திரி ஹர்சவர்தன் தகவல்

Published On 2020-09-20 23:00 GMT   |   Update On 2020-09-20 23:00 GMT
இந்தியாவில் உமிழ்நீர் அடிப்படையில் கொரோனா பரிசோதனை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்கிறது என மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், தன்னை சமூக ஊடகங்களில் பின்தொடர்கிறவர்களுடன் நேற்று ‘சண்டே சம்வத்’ தளத்தின் மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய அளவில், பல மாதங்களாக, பல நேரங்களில் சேகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பெரிய அளவில் வரிசைப்படுத்துகிறது. இந்த வைரசின் பிறழ்வுகள், பரிணாம வளர்ச்சி பற்றிய முடிவுகள் அக்டோபர் மாத தொடக்கத்தில் கிடைக் கும். இந்தியாவில் கொரோனா வைரஸ் திரிபுகளில் குறிப்பிடத்தக்க அல்லது கடுமையான பிறழ்வுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உமிழ் நீர் அடிப்படையில் கொரோனா வைரசை கண்டறிவதற்கான பரிசோதனைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. ஆனால் நம்பகமான சோதனை எதுவும் கண்டறியப்படவில்லை. அமெரிக்க நாட்டின் உணவு மற்றும் மருந்துப்பொருள் நிர்வாகம் ஒப்புதல் அளித்த சோதனைகளை செய்கிற நிறுவனங்கள் மத்திய அரசை இன்னும் நாடவில்லை. இந்த சோதனை முறையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இதில் நம்பகமான தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் கிடைத்த உடன் தெரிவிக்கப்படும்.

நாட்டில் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தொடர்பான நிலைமையை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது

வெளிச்சத்துக்கு வந்துள்ள தளவாட சிக்கல்களை தவிர்ப்பதற்காக நாட்டின் கிராமப்புறங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை சுகாதார அமைச்சகம்அனுப்பி வைத்துள்ளது.

(கொரோனாவில் பலியான) கொரோனா வீரர்கள் 155 பேரது குடும்பங்கள் பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின்கீழ் (சுகாதார பணியாளர்களுக்கான கொரோனா காப்பீட்டு திட்டம்) நிவாரணம் கேட்டு அணுகி உள்ளன. 155 குடும்பங்களில் 64 டாக்டர்கள், 32 துணை நர்சு மற்றும் பன்னோக்கு சுகாதார பணியாளர்கள், 14 ஆஷா தொழிலாளர்கள் மற்றும் 45 முன்னணி ஊழியர்களின் குடும்பங்கள் அடங்கும்.

மந்தை எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு, மக்கள் தொகையின் 70 சதவீதம் பேர் அதை பெறுவதற்கு கணிசமான காலம் எடுக்கும். எனவே முதன்மையான கட்டுப்பாடு மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை ஒருங்கிணைக்கும் உத்தி மீது அரசு கவனம் செலுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு டாக்டர் என்ற வகையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பற்றிய தகவல்களை டாக்டர் ஹர்சவர்தன் பகிர்ந்து கொண்டார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பாக வரவுள்ள தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது தொடர்பாக எழுந்துள்ள அச்சத்தை அகற்றவும் அவர் முயற்சி மேற்கொண்டார். அப்போது தடுப்பூசியை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை எடுத்துக் கூறினார்.
Tags:    

Similar News