செய்திகள்
குஜராத்துக்கு இறுதி பயணத்தை தொடங்கிய ‘ஐ.என்.எஸ். விராத்’ விமானந்தாங்கி கப்பலை படத்தில் காணலாம்.

‘ஐ.என்.எஸ். விராத்’ விமானந்தாங்கி கப்பலின் இறுதி பயணம் தொடங்கியது

Published On 2020-09-19 20:59 GMT   |   Update On 2020-09-19 20:59 GMT
இந்திய கடற்படையில் பணியாற்றி வந்த ‘ஐ.என்.எஸ். விராத்’ விமானந்தாங்கி போர்க்கப்பல் மும்பையில் இருந்து குஜராத்துக்கு தனது கடைசி பயணத்தை நேற்று தொடங்கியது.
மும்பை:

இங்கிலாந்து கடற்படையில் ‘எச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த விமானந்தாங்கி போர்க்கப்பலை, இந்தியா கடந்த 1986-ம் ஆண்டு வாங்கியது. இது ஐ.என்.எஸ். விராத் என்ற பெயரில் இந்திய கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய இந்த கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது.

பின்னர் இதை அருங்காட்சியமாகவோ அல்லது உணவு விடுதியாகவோ மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாததால், ஏலத்தில் விற்கப்பட்டது. இதை ரூ.38.54 கோடிக்கு குஜராத்தை சேர்ந்த ஸ்ரீராம் குரூப் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.

இதைத்தொடர்ந்து அதை உடைப்பதற்காக குஜராத்தின் அலாங்கில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக மும்பை கடற்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் விராத் கப்பல் புறப்படுவதாக இருந்தது. ஆனால் ஒருநாள் தாமதமாக நேற்று புறப்பட்டது.

அதன்படி, மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த போர்க்கப்பலை இழுவை படகு ஒன்று இழுத்து ஆழ்கடலுக்கு கொண்டு சென்றது. அப்போது கடற்படை தளத்தில் குழுமியிருந்த கடற்படை அதிகாரிகள் உணர்ச்சி பெருக்குடன் ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

வானிலை சீராக இருந்தால், நாளைக்குள் இந்த கப்பல் அலாங் தளத்தை அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுங்க இலாகா அனுமதி கிடைத்தவுடன், கப்பல் உடைக்கப்படும். இதற்கு 9 முதல் 12 மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது.

இந்திய கடற்படையில் இருந்த காலத்தில் ஆபரேஷன் ஜூபிடர், பராக்ராம், விஜய் ஆகிய நடவடிக்கைகளில் ஐ.என்.எஸ். விராத் முக்கிய பங்காற்றி உள்ளது. மேலும் சர்வதேச கடற்படை பயிற்சிகள் பலவற்றில் பங்கு கொண்டுள்ள ஐ.என்.எஸ். விராத், கடைசியாக விசாகப்பட்டினத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றது.

25 விமானங்கள், 1500 வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சுமந்து செல்லும் திறன் பெற்ற இந்த போர்க்கப்பல், மிதக்கும் நகரம் என அழைக்கப்பட்டது. இங்கிலாந்து ராயல் கடற்படையில் 1959-ல் சேர்க்கப்பட்ட இந்த போர்க்கப்பல் மொத்தமாக 2,258 நாட்கள் கடலில் இருந்துள்ளது. 5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ளது.

இந்தியாவில் உடைக்கப்படும் 2-வது விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விராத் ஆகும். முன்னதாக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கடந்த 2014-ம் ஆண்டு மும்பையில் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News