செய்திகள்
ஜே.பி.நட்டாவுடன், முதல்-மந்திரி எடியூரப்பா சந்திப்பு

கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்புக்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி

Published On 2020-09-19 04:22 GMT   |   Update On 2020-09-19 04:22 GMT
கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு தொடர்பாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபை விஸ்தரிப்புக்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிவிட்டது. மந்திரிசபையில் தற்போது 28 பேர் உள்ளனர். இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசிய அவர், நேற்று மாலை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது எடியூரப்பா, மந்திரிசபையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், அதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டார். மேலும் தான் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத், ஆர்.சங்கர் ஆகியோருக்கு மந்திரிசபையில் இடம் அளிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் எடுத்துக் கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா 5 பேர் பெயர் அடங்கிய பட்டியலை ஜே.பி.நட்டாவிடம் வழங்கியதாகவும், அதில் 3 பேருக்கு மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடத்திடம் ஆலோசித்துவிட்டு ஜே.பி.நட்டா அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எச்.விஸ்வநாத்துக்கு மந்திரி பதவி வழங்கப்படுமா? என்று உறுதிபட தெரிவிக்கப்படவில்லை.

இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எங்கள் கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அதற்கு அவர், பிரதமர் மற்றும் கட்சி மேலிடத்திடம் ஆலோசித்துவிட்டு அனுமதி வழங்கி உள்ளார்“ என்றார்.
Tags:    

Similar News