செய்திகள்
பிரதமர் மோடி

இளம்வயதில் துறவியாக விரும்பிய பிரதமர் மோடி- ருசிகர தகவல்கள்

Published On 2020-09-17 12:12 GMT   |   Update On 2020-09-17 12:12 GMT
ஒரு ஏழைத் தாயின் மகனாக டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கி பிரதமராக உச்சம் தொட்டுள்ள நரேந்திர மோடி இளம்வயதில் துறவியாக விரும்பிய ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடிக்கு இன்று 70-வது பிறந்த நாள் ஆகும். பிரதமர் மோடி 1950-ம் ஆண்டு இதே நாளில் குஜராத் மாநிலம் வாத் நகரில் பிறந்தார். அவரது தந்தை தாமோதர்தாஸ் மோடி, தாயார் ஹிராபென். குஜராத் பல்கலைக்கழகத்தில் 1983-ம் ஆண்டு தொலைதூர கல்வி மூலம் எம்.ஏ. அரசியல் அறிவியல் படித்த அவர் 1993-ம் ஆண்டு அமெரிக்காவில் 3 மாத டிப்ளமோவான பப்ளிக் ரிலே‌ஷன்ஸ், இமேஜ் மேனேஜ்மெண்ட் படிப்பையும் முடித்துள்ளார்.

ஒரு ஏழைத் தாயின் மகனாக டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கி பிரதமராக உச்சம் தொட்டுள்ளார்.

பிரதமர் மோடி 1966-ம் ஆண்டு ராமகிருஷ்ணா மடத்தில் ஆத்மஸ்தானந்தா சுவாமியை சந்தித்து துறவியாக விரும்புவதாக கூறினார். ஆனால் அவரோ மக்களுக்கு சேவையாற்றும்படி கூறினார். அதன் பிறகு இமயமலை பகுதியில் சுற்றி திரிந்து புது அனுபவங்களை பெற்று இளம் வயதிலேயே பற்றுகளில் இருந்து விடுபட்டார்.

சிறு வயதில் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்தது. அந்த ஆசை நிறைவேறவில்லை. 1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அப்போது மோடிக்கு 15 வயது. அந்த வயதில் அவர் ராணுவ வீரர்களுக்கு ரெயில் நிலையத்தில் டீ கொடுத்து உதவினார். பிரதமர் ஆன பிறகு ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்து பிரதமர் ஆன முதல் தலைவர் மோடிதான். ஜனாதிபதி மாளிகை முன்பு திறந்த வெளி அரங்கில் பதவி ஏற்ற முதல் பிரதமரும் அவர்தான். அயோத்தி ராமஜென்ம பூமிக்கு சென்ற முதல் பிரதமரும் மோடிதான்.

மோடிக்கு பள்ளிப் பருவத்திலேயே பொது சேவையில் நாட்டம் இருந்தது. அவர் படித்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. எனவே அவர் தனது நண்பர்களுடன் நாடகம் நடத்தினார். அதில் கிடைத்த தொகையை பள்ளியின் சுற்றுப்புற சுவர் கட்ட உதவினார்.

குஜராத்தின் முதல்வராக மோடி பதவி ஏற்ற போது “எப்போதும் சி.எம். ஆக இருப்பேன்” என்றார். ஆங்கிலத்தில் சி.எம். என்றால் காமன்மேன் (சாதாரணமனிதன்) என்பது பொருளாகும்.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போதும், பிரதமராக இருக்கும் போதும் ஒருநாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. இதுவரை பிரதமராக இருந்தவர்கள் மதியம் அல்லது மாலையில் அலுவலகத்தை விட்டு சென்று விடுவார்கள். ஆனால் மோடி காலை முதல் நள்ளிரவு வரை பணியாற்றுவது வழக்கம். அவர் அலுவலகத்தில் பியூன் முதல் முதன்மை செயலாளர் வரை யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை.

பள்ளி நாட்களில் மரத்தின் மீது ஏறி பட்டத்தின் நூலில் சிக்கிய பறவையை மீட்டார். இதற்காக அவரை ஆசிரியர் பராட்டினார். சிறுவனாக இருக்கும் போது முதலை குட்டி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்தார். தாய் கண்டித்ததால் அதை மீண்டும் குளத்துக்குள் விட்டார். பள்ளி பருவத்தில் ஏரியில் குளிக்கும் போது முதலையின் வால் தாக்கியதில் அவரது கால் விரலில் காயம் ஏற்பட்டு தப்பினார்.

பள்ளியில் படித்த போது ஷூ பாலிஷ் வாங்க வசதி இல்லாததால் ஆசிரியர்கள் எழுதிய பின் தூக்கி ஏறியும் சாக்பீஸ் துண்டுகளை தண்ணீரில் ஊற வைத்து அதை பாலிஷ் ஆக பயன்படுத்துவார். சிறுவயதிலேயே அவர் உடை வி‌ஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார். பள்ளி சீருடையை மடித்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவார். காலையில் வெண்கல பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி அயர்ன் செய்வார்.

குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்ற போது ‘லஞ்சம் வாங்காதே’ என அவரது தாய் ஆசி வழங்கினார். இதை தன் வாழ்வில் கடை பிடிக்கிறார்.

வறுமை ஒழிப்பு, மருத்துவ உதவி, கொரோனா பாதிப்புகளின்போது ‘பி.எம்.கேர்’ நிதிக்கு தனது சம்பளத்தில் இருந்து ரூ.22 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

மோடி மிகுந்த தேச பக்தி கொண்டவர். தேர்தல் பிரசாரத்தின் போது தாய்நாட்டுக்கு ஓட்டளியுங்கள் என்று கேட்பார். தனது பேச்சை முடிக்கும் போது ‘பாரத் மாதா கி ஜே, ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்‘ என்று முழக்கமிடுவார்.

Tags:    

Similar News