செய்திகள்
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன்

கொரோனாவால் எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் இல்லை என கூறிய மத்திய அரசு - கடும் கண்டனம் தெரிவித்த இந்திய மருத்துவ சங்கம்

Published On 2020-09-16 22:07 GMT   |   Update On 2020-09-16 22:07 GMT
கொரோனாவால் எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் எங்களிடம் இல்லை என கூறிய மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவரது பேச்சில் பணியின் போது கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல் இடம்பெறவில்லை. 

இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறையின் இணைமந்திரி அஸ்வினி குமார் சௌபாய், சுகாதாரத்துறை மாநில அரசுகளை சார்ந்தது
என்பதால் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கான காப்பீடு மற்றும் இழப்பீடு தொடர்பான தகவல்கள் தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை என்றார்.

மத்திய சுகாதாரத்துறையின் இந்த கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா காரணமாக 328 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் குறைந்தபட்ச வயதுடைய மருத்துவர் 27 வயதுடைய இளம் மருத்துவர். அதிகபட்ச வயது 85 வயதுடைய மூத்த மருத்துவர் ஆகும்.

இந்தியாவை தவிர வேறு எந்த ஒரு நாடும் கொரோனாவுக்கு இத்தனை அதிக அளவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழப்புகளை
சந்திக்கவில்லை.

ஆனால் தொற்றுநோய்களின் போது சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்பை ஒப்புக் கொண்டாலும், இந்த நோயால் உயிரிழந்த மருத்துவர்கள் பற்றி சுகாதார மந்திரி குறிப்பிடவில்லை. 

நாடு முழுவதும் எத்தனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர் மற்றும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என்ற விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்றால் அது பெருந்தொற்று சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டது.

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவ ஊழியர்கள்கள் தியாகிகளாக போற்றப்பட வேண்டும். ஆனால், ஒரு பக்கம் மருத்துவ பணியாளர்களை கொரோனா வாரியர்ஸ் என கூறி மறுபக்கம் அவர்களை தியாகிகளாகவும், அவர்களது குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களையும் கொடுக்க மறுத்து மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது.    

என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News