செய்திகள்
நித்யானந்த் ராய்

இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Published On 2020-09-16 21:40 GMT   |   Update On 2020-09-16 21:40 GMT
இந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:-

இந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 3 தடுப்பூசிகள், முதல்கட்ட, 2-ம் கட்ட, 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மேலும், 4 தடுப்பூசிகள், பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் இம்மாதம் 30-ந் தேதிவரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக, அந்த பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மக்கள்தொகை தகவல்களை பாதுகாக்க பல அடுக்கு பாதுகாப்பு அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள விரிவான திருத்தங்கள் குறித்து மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் ஆகியோரிடமும், இந்திய பார் கவுன்சில், மாநில பார் கவுன்சில்கள், பல்கலைக்கழகங்கள், சட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிடமும் மத்திய உள்துறை அமைச்சகம் யோசனை கேட்டிருப்பதாக மத்திய உள்துறை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி, மாநிலங்களவையில் தெரிவித்தார்.

ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்தவர்களை அவரவர் நாடுகளுக்கு அழைத்துச்செல்ல ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ், கடந்த மே 6-ந் தேதி முதல், ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது.

கடந்த ஆகஸ்டு 31-ந் தேதிபடி, இதன்மூலம் ஏர் இந்தியாவுக்கு ரூ.2 ஆயிரத்து 556 கோடியே 60 லட்சம் வருவாய் கிடைத்து இருப்பதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி மாநிலங்களவையில் தெரிவித்தார். 11 லட்சம் இந்தியர்கள், இச்சேவையை பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியதில், போலீஸ் அத்துமீறல் காரணமாக தனிநபர்களுக்கு மரணமோ, காயமோ, துன்புறுத்தலோ ஏற்பட்டது பற்றிய தகவல்களை மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கே கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி, “அத்தகைய தகவல்கள், மத்திய அரசு மட்டத்தில் பராமரிக்கப்படவில்லை. போலீஸ் விவகாரம், மாநில பட்டியலில் இருப்பதால், மாநில அரசுகளிடம்தான் தகவல்கள் இருக்கும்” என்று கூறினார்.
Tags:    

Similar News