செய்திகள்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - பியூஷ் கோயல் திட்டவட்டம்

Published On 2020-09-16 17:41 GMT   |   Update On 2020-09-16 17:41 GMT
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் பதிலளித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்க உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதற்கான டெண்டர் 2021 ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதே சமயம் 2030 ஆம் ஆண்டு வரை ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவது, மேம்படுத்துவது, நவீனப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் கோடி நிதி தேவைபடுவதாக அவர் கூறினார்.

இந்த நிதி பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகவும், பயணிகளுக்கு தரமான ரயில் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காகவும் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் PPP என்று சொல்லப்படும் பப்ளிக் & பிரைவேட் பார்டர்ஷிப் (Public and Private Partnership) முன்மாதிரியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில வழித்தடங்களில் நவீன அம்சங்கள் கொண்ட ரயில்களை இயக்குவதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார். மத்திய அரசு ஏற்கனவே சில வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தூத்துக்குடி-தாதன்குளம் ரயில் நிலையம் மூடப்படுமா? என திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் அப்படி எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என விளக்கமளித்தார்.
Tags:    

Similar News