செய்திகள்
சசிகலா

சசிகலாவின் நன்னடத்தைக்காக 129 நாட்கள் கழிக்கப்படுமா?- ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-09-16 08:49 GMT   |   Update On 2020-09-16 08:49 GMT
சசிகலாவின் நன்னடத்தைக்காக 129 நாள் தண்டனை குறைக்கப்படுமா என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கடந்த 3½ ஆண்டுகளாக அவர் ஜெயிலில் இருந்து வருகிறார். அவர் எப்போது விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் இருந்து வருகிறது.

அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் சசிகலாவின் விடுதலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சசிகலாவின் விடுதலை தொடர்பான தகவல்களை பெங்களுரு வக்கீல் டி.நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார். அவருக்கு பதில் அளித்து மத்திய சிறையின் கண்காணிப்பாளர் லதா அனுப்பியுள்ள கடிதத்தில், “சசிகலா அபராத தொகையை செலுத்தினால் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலை ஆவார். அபராத தொகையை செலுத்த தவறினால் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி விடுதலை ஆவார்” என்று கூறி இருந்தார்.

சசிகலா ரூ.10 கோடி அபராத தொகையை உரிய தேதிக்குள் கட்டத்தவறினால் மேலும் 13 மாதங்கள் தண்டனை அனுபவிக்க நேரிடும். சிறை விதிகளின்படி ஜெயிலில் இருக்கும் காலத்தில் நன்னடத்தைக்காக ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைக்கப்படும். சசிகலா இதுவரை 43 மாதங்களாக ஜெயிலில் இருந்து வருகிறார். அதன்படி மொத்த ஜெயில் தண்டனையில் இருந்து நன்னடத்தைக்காக 129 நாட்கள் தண்டனை குறைக்க வாய்ப்பு உள்ளது.

அவர் அபராத தொகையை கட்டும்பட்சத்தில் 129 நாள் தண்டனை குறைப்பு கிடைத்தால் அவர் இந்த மாதம் இறுதியில் விடுதலை செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

அவருக்கு 129 நாள் தண்டனை குறைக்கப்படுமா? என்பதை அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Tags:    

Similar News