செய்திகள்
மாநிலங்களவை

ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

Published On 2020-09-16 06:29 GMT   |   Update On 2020-09-16 06:29 GMT
குஜராத்தில் உள்ள மூன்று நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
புதுடெல்லி:

குஜராத்தில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதுகலை ஆயுர்வேதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆயுர்வேத மஹாவித்யாலயா, ஆயுர்வேத மருந்துகள் நிறுவனம் ஆகியவற்றை ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் ஒன்றிணைக்க ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மசோதா உருவாக்கப்பட்டது. ஜாம் நகரில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிறுவனம் செயல்படவும், இதற்கு தேசிய அந்தஸ்து வழங்கவும், இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இந்த மசோதா கடந்த மார்ச் மாதம், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நேற்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தாக்கல் செய்தார். அப்போது. அவர் பேசுகையில், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அது தொடர்பான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தேசிய அந்தஸ்து பெற உள்ள முதல் ஆயுர்வேத நிறுவனம் இதுதான் என்றும் கூறினார்.

பின்னர் மசோதா மீது நேற்றும் இன்றும் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற எம்பிக்கள், ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News