செய்திகள்
மந்திரி சுதாகர்

அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும்: மந்திரி சுதாகர்

Published On 2020-09-16 02:07 GMT   |   Update On 2020-09-16 02:07 GMT
இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் டாக்டர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள். அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு :

சம்பள உயர்வு கோரி அரசு டாக்டர்கள் ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள் சங்க பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூருவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சம்பள உயர்வு கோரி அரசு டாக்டர்கள் ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து அவர்களை அழைத்து இன்று (நேற்று) பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது. அவர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும். இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் டாக்டர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள். அதனால் சுகாதாரத்துறை முன்வைத்து வரும் கோரிக்கைகளை முதல்-மந்திரி எடியூரப்பா நிறைவேற்றி வருகிறார். நிதித்துறையிடம் விவரங்கள் எடுத்துக் கூறப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் சீனிவாஸ் கூறுகையில், “சம்பள உயர்வு கோரி நாங்கள் ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இன்று (நேற்று) மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மந்திரி உறுதியளித்துள்ளார். வருகிற 18-ந் தேதி எங்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பிறகு மந்திரியை மீண்டும் சந்தித்து பேசுவோம். அதுவரை எங்களின் இந்த ஒத்துழையாமை போராட்டம் தொடரும்“ என்றார்.
Tags:    

Similar News