செய்திகள்
கோப்புப்படம்

குளிர்காலத்தை எதிர்கொள்ள லடாக் எல்லையில் ராணுவம் தயார்

Published On 2020-09-15 22:55 GMT   |   Update On 2020-09-15 22:55 GMT
எல்லையில் குளிர்காலத்தை சந்திக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார்.
லே:

சீன துருப்புகளின் தொடர் அத்துமீறலால் லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரு தரப்பு படைகள், தளவாடங்கள் குவிக்கப்பட்டு தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் நீண்டதொரு குளிர்காலம் வரவுள்ளது. வெப்ப நிலை பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழே செல்லும்போது, அங்கு உயிரை உறைய வைக்கும் குளிர் நிலவும். மாதக்கணக்கில் நாட்டின் எஞ்சிய பகுதிகளுடன் லடாக் துண்டிக்கப்பட்டிருக்கும்.

இந்த சூழலிலும் தேசத்தை காக்க ராணுவம் அங்கே நின்று பணியாற்ற வேண்டியதிருக்கிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளுடன் ராணுவம் பணியாற்ற தயார் ஆகிறது.

ராணுவ வீரர்களுக்கு குளிர்காலத்துக்கு தேவையான சிறப்பு ஆடைகள், எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை லடாக்கில் முன்னேறிய நிலை பகுதிகளுக்கு போய் சேர்ந்துள்ளன.

இதுபற்றி ராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் கூறும்போது, “எல்லையில் குளிர்காலத்தை சந்திக்க ராணுவம் தயார் ஆகிறது. அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எண்ணெய், ஹீட்டர்கள், வெடிமருந்துகள் என எல்லாவற்றையும் தேவையான அளவு இருப்பு வைக்கிறோம். எங்கெங்கு தேவையோ அங்கெங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News