செய்திகள்
பில் கேட்ஸ்

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்கு முக்கியமானது - பில் கேட்ஸ்

Published On 2020-09-15 20:19 GMT   |   Update On 2020-09-15 20:19 GMT
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு, தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்று மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் கூறினார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், சீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றியது. இந்த 9 மாத காலத்தில் அது விசுவரூபம் எடுத்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உள்ளது. உலகமெங்கும் 2.95 கோடி பேரை அது பாதித்து இருக்கிறது. 9.34 லட்சம் உயிர்களை கொரோனா பலி கொண்டு இருக்கிறது.

இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பலவும் தடுப்பூசி தயாரித்து, மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பல்வேறு கட்ட சோதனையில் முழுவீச்சில் இறங்கி உள்ளன.

இந்த தருணத்தில் கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி வழியாக சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்பது உலகப்போர் போன்றதல்ல. ஆனால் உலக போருக்கு பின்னர் உலகம் எதிர்கொள்ளும் அடுத்த மிகப்பெரிய விஷயம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்தான். கொரோனா தடுப்பூசி வந்தவுடன், பெரிய அளவிலான தயாரிப்புக்கு உலகமே இந்தியாவைத்தான் எதிர்பார்க்கிறது. அந்த வகையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றை உலகளவில் கட்டுப்படுத்த, தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது.

வெளிப்படையாகவே, நாங்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து ஒரு தடுப்பூசியை விரைவாக பெற விரும்புகிறோம். கொரோனா தடுப்பூசி வந்து, அது பயனுள்ளது, மிகவும் பாதுகாப்பானது என நாங்கள் அறிந்தவுடன், அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட கால கட்டத்தில் தடுப்பூசி திட்டங்களில் கவனம் செலுத்துவோம். இது நடைபெறும். மிகப்பெரிய அளவில் நடக்கும்.

உலகளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்களிப்பை செய்வதில் இந்தியாவின் விருப்பமும், அந்த தடுப்பூசிகளில் சிலவற்றை பிற வளரும் நாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதும் அதன் முக்கியமான பகுதி ஆகும். எங்களுக்கு இதில் பங்கு இருப்பதை உறுதிப்படுத்த இந்தியா உதவும்.

தடுப்பூசியை மிகவும் தேவைப்படுகிறவர்களுக்கே வழங்குவது என்பது, பணக்கார நாடுகளுக்கு மட்டுமே அனுப்பினால் நீங்கள் இழக்க நேரிடும் பாதி உயிர்களை காப்பாற்றும். இதைக் காட்டும் ‘மாதிரி’ (மாடல்) எங்களிடம் உள்ளது.

அஸ்ட்ரா ஜெனேகா, ஆக்ஸ்போர்டு அல்லது நோவாவேக்ஸ் அல்லது ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகியோரிடம் இருந்து வந்தாலும்கூட, ஒரு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் யோசனையை செயல்படுத்த நாங்கள் பேசி வருகிறோம். அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் நோவாவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் அதிகளவில் தயாரித்து வழங்கும் ஏற்பாடு குறித்து நாங்கள் பகிரங்கமாக பேசி உள்ளோம்.

இந்தியாவின் நிதி ஆயோக் அமைப்புடன் எங்கள் அறக்கட்டளை பெரிய அளவில் சிறந்த விவாதங்களை நடத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒழுங்குமுறை அம்சங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கவனித்து வருகிறது.

இந்த புதிய நிறுவனங்களுடன், மேற்கத்திய நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட இந்த விஷயங்கள் தொடர்பாக அரசுடனும், நிறுவனங்களுடனும் நடத்திய பேச்சுகள், என்னை கவர்ந்துள்ளன. அவை நன்றாகவே நடந்துள்ளன.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் (மார்ச் மாதத்துக்குள்), இந்த தடுப்பூசிகளில் பல, மூன்றாவது கட்ட அவசர உரிம ஒப்புதலை எட்டி விடும் என்று நான் நம்புகிறேன். அதில் ஏமாற்றம் ஏற்படவும் கூடும். ஆனால் முதல் கட்டம் மற்றும் இரண்டாவது கட்டம் குறித்த ஆரம்ப கட்ட தரவுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஆன்டிபாடிகளின் அளவை பொறுத்தமட்டில், இந்த தடுப்பூசிகளில் சில நம்பிக்கைக்கு உரியவை.

தடுப்பூசிகளின் விலையை குறைவாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தப்படவேண்டும். மேலும், அவை மிக அதிக அளவில் தயாரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட பின்னரும்கூட, அதன் செயல்திறன் 50 சதவீதமாக அமைக்கப்பட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே அதிக செயல்திறனைப் பெற மற்ற தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் தொடர்பை தொடர நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News