செய்திகள்
நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த காட்சி.

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

Published On 2020-09-15 02:55 GMT   |   Update On 2020-09-15 02:55 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு :

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக கடந்த 4-ந் தேதி நடிகை ராகிணி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவரை, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திவிட்டு காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ராகிணி திவேதி சார்பில் பெங்களூரு சிட்டி மற்றும் செசன்சு கோர்ட்டில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு மீது கடந்த 11-ந் தேதி நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் வழக்கு விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, நேற்று நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நடிகை ராகிணி திவேதி போலீஸ் காவலில் இருப்பதால், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்காத காரணத்தால், ஜாமீன் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கூறினார். அதே நேரத்தில் ராகிணி திவேதி போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராகிணி திவேதியின் வக்கீல் வாதிட்டார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க 2 நாட்கள் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் மனு மீதான விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு (அதாவது நாளை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று காலையில் கோர்ட்டில் நடந்த போது, அவர் போலீஸ் காவலில் இருந்தார். பின்னர் நேற்று மதியம் அவர் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதன் காரணமாக நாளை (புதன்கிழமை) கோர்ட்டில் ஜாமீன் மனு மீது நடைபெறும் விசாரணையின் போது நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News