செய்திகள்
கோப்புப்படம்

ராகுல் காந்தி, காங்கிரசுக்கு தலைவராகும் வாய்ப்பு உறுதியாகி உள்ளது - மூத்த தலைவர்கள் கருத்து

Published On 2020-09-12 21:12 GMT   |   Update On 2020-09-12 21:12 GMT
சோனியா ஏற்படுத்தியுள்ள அதிரடி மாற்றங்களால், கட்சிக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைவராகும் வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளில் சோனியா ஏற்படுத்தியுள்ள அதிரடி மாற்றங்களால், கட்சிக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைவராகும் வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு சுறுசுறுப்பான தலைமை தேவை என கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சமீபத்தில் கடிதம் எழுதியது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. காரியக்கமிட்டிக்கு தேர்தல் நடத்துமாறும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டியை கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் அதிரடியாக மாற்றியமைத்தார். மேலும் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மாற்றம், கட்சியை வழிநடத்துவதற்கு தலைமைக்கு ஆலோசனை வழங்க சிறப்பு குழு அமைப்பு என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆனால் இதில் மேற்படி கடிதம் எழுதிய தலைவர்களில் ஒருசிலரை தவிர மீதமுள்ளவர்கள் யாரும் புதிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதிலும் அந்த குழுவில் முக்கியமானவரான குலாம் நபி ஆசாத்திடம் இருந்த பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது. அவர் காரியக்கமிட்டி உறுப்பினராக மட்டுமே தொடர்கிறார்.

இதைப்போல அந்த குழுவில் இடம் பெற்றிருந்த கபில்சிபல், சசிதரூர், மணிஷ் திவாரி போன்ற முக்கியமானவர்களும் புதிய பதவிகளுக்கு கண்டுகொள்ளப்படவில்லை. முகுல் வாஸ்னிக் மட்டுமே முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டு உள்ளார்.

இவ்வாறு காரியக்கமிட்டி நேரடியாக மாற்றி அமைக்கப்பட்டதன் மூலம் யாருடைய அழுத்தங்களுக்கும் கட்சித்தலைமை அடிபணியாது என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டு இருப்பதாக கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள நிர்வாகிகள் பலரும் ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் என அறியப்படுபவர்கள் ஆவர். அந்தவகையில் காரியக்கமிட்டியின் 26 நிரந்தர அழைப்பாளர்களில் 11 பேர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் ஆவர். இதைப்போல நிரந்தர உறுப்பினர்கள் 22 பேரில் கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜிவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், ஆர்.எஸ்.மீனா உள்ளிட்டோர் ராகுலின் நம்பிக்கை பெற்றவர்கள் ஆவர்.

9 சிறப்பு அழைப்பாளர்களில் 7 பேர் ராகுல் காந்திக்கு விசுவாசமானவர்கள். மாநிலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 17 பேரிலும் 13 பேர் ராகுலுக்கு மிகுந்த நெருக்கமானவர்கள் ஆவர். 9 பொதுச்செயலாளர்களில் கூட சுர்ஜிவாலா, கே.சி.வேணுகோபால், ஜிதேந்திர சிங் ஆகியோர் ராகுல் காந்தியின் பிரிவினர் ஆவர்.

இதன் மூலம் காங்கிரசில் ராகுல் காந்தியின் நிலையை சோனியா காந்தி மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த கூட்டத்தில், கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உறுதியாகி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க சோனியா காந்தி மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றம், கட்சியில் நடைபெற உள்ள ஒரு தலைமுறை மாற்றத்தின் தொடக்கமாக அமைந்திருப்பதாக ஒருசாரார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஸ்வனி குமார் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் அமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், சோனியாவின் மிகச்சிறந்த முத்திரையை கொண்டிருக்கின்றன. அனுபவம், விசுவாசம், இளமை ஆகியவை சமநிலையில் இருப்பதுடன், தலைமுறை மாற்றத்துக்கான ஒரு செயல்திட்டமாகவும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. எதிர்கால கட்சித்தலைமைக்கான ஒரு வடிவமைப்பை இந்த நியமனங்கள் எடுத்துக்காட்டுகிறது.

சிறப்பு கமிட்டியின் பதவிக்காலம் குறுகிய நிலையில் இருப்பதால், மிக விரைவில் கட்சிக்கு புதிய தலைமை கிடைக்கும் என தெரிகிறது.

இவ்வாறு அஸ்வனி குமார் தெரிவித்தார்.

இதைப்போல, கட்சியில் அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கு ஏற்ப ஒரு சமநிலை முடிவை சோனியா அறிவித்து உள்ளதாகவும், குறிப்பாக கட்சியில் ஒரு தலைமுறை மாற்றத்தை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் மற்றொரு தலைவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News