செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

ஏக்நாத் கட்சேயை விமர்சிக்க மாட்டேன்: தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2020-09-12 04:02 GMT   |   Update On 2020-09-12 04:02 GMT
கட்சே எங்கள் மூத்த தலைவர். எனவே நான் அவரை விமர்சிக்கவோ அல்லது அவர் குறித்து கருத்து தெரிவிக்கவோ மாட்டேன் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை :

முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் ஏக்நாத் கட்சே. தன்மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

பின்னர் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதால் பாரதீய ஜனதா மீதும், முன்னாள் முதல்- மந்திரி பட்னாவிஸ் மீதும் அதிருப்தியில் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் தேவேந்திர பட்னாவிசின் சதித்திட்டம் இருப்பதாகவும், தான் ராஜினாமா செய்ததில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவரின் கைவண்ணம் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இதுகுறித்து ஆதாரத்துடன் தான் புத்தகம் எழுதப்போவதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று இது குறித்து பேட்டியளித்த முன்னாள் முதல்-மந்தரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

எனக்கு நிறைய பொறுமை இருக்கிறது. நான் அழுக்கு துணியை பொது இடத்தில் கழுவ மாட்டேன். கட்சே எங்கள் மூத்த தலைவர். எனவே நான் அவரை விமர்சிக்கவோ அல்லது அவர் குறித்து கருத்து தெரிவிக்கவோ மாட்டேன்.

முதலில் அவர் மீது நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிடம் பேசியதாக புகார் எழுந்தது. நான் இந்த விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டதுடன், 12 மணி நேரத்திற்குள் அவர் தவறு செய்யவில்லை என நிரூபித்தேன்.

ஆனால் நில அபகரிப்பு வழக்கில் அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. நான் அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க நீதிபதி தலைமையில் குழு அமைத்தேன். ஏக்நாத் கட்சேவை இந்த விசாரணையை கோரியிருந்தார். அந்த குழு தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தது.

ஆனால் அதற்குள் சிலர் ஐகோர்ட்டை அணுகினர். அங்கு கட்சே மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இதில் என் பங்கு ஒன்றும் இல்லை.

இதைதொடர்ந்து இந்த வழக்கில் எனது அரசு 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் கோர்ட்டு அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. கட்சே எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவருக்கு புகார்கள் இருந்தால் கட்சிக்குள் அவருடன் கலந்துரையாடி பிரச்சினையை தீர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News