செய்திகள்
பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா பார்சல்கள்

வியாபாரிகள் போன்று நடித்து 1300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பெங்களூரு போலீசார் -கமிஷனர் பாராட்டு

Published On 2020-09-11 08:37 GMT   |   Update On 2020-09-11 08:37 GMT
வியாபாரிகள் போன்று நடித்து ஆட்டுப் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1300 கிலோ கஞ்சா பார்சல்களை பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் போதைப்பொருள் தடுப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகை ராகினி திவேதி நகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த பலர் சிக்கி உள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பெங்களூரு பகுதியில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கலபுரகி மாவட்டம் கமலாநகர் பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருள் மிகப்பெரிய அளவில் சப்ளை ஆவது பெங்களூரு நகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று போலீசார் கலபுரகி சென்று சோதனையிட்டனர். 

அப்போது போதைப்பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. நகருக்கு வெளிப்புறத்தில் உள்ள ஒரு செம்மறி ஆட்டு பண்ணையில் உள்ள நிலவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும். இதுவரை சிக்கிய போதைப்பொருட்களில் இது அதிகம் ஆகும்.

2 போலீஸ் அதிகாரிகள் மாறு வேடத்தில் போதைப்பொருள் வாங்குவதுபோல் அந்த பகுதிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சந்திரகாந்த் சவான் மற்றும் நாக்நாத் ஆகியோர் கஞ்சா விற்பனை செய்யலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அவர்களை தொடர்பு கொண்டனர். முதலில் தங்களிடம் அப்படி எதுவும் இல்லை என்று மழுப்பி உள்ளனர். 

பின்னர் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்துள்ளனர். இருப்பினும் போலீசாரை நேரில் சந்திக்காமல் 11 முறை இழுத்தடித்தபிறகே, கஞ்சா விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் பண்ணைக்கு அழைத்துச் சென்றபோது கையும் களவுமாக கஞ்சா வியாபாரிகளை போலீசார் பிடித்துள்ளனர். 

போதைப்பொருள் கும்பலை பிடித்த போலீஸ் அதிகாரிகளை பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பன்ட் பாராட்டி உள்ளார். மேலும் அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஒடிசாவில் இருந்து இந்த கஞ்சா மூட்டைகளை காய்கறி மூட்டைகளுடன் கலந்து கடத்தி வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News